அஜித்தை, கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கியிருக்கிறது, 'மங்காத்தா' ஓபனிங். சன் பிக்சர்ஸின் 'எந்திரன்' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமா வரலாற்றில் இரண்டாவது பெரிய ஓபனிங், 'மங்காத்தா'வுக்குத்தான். இதை எதிர்பார்த்தாரா அஜித்?
நம்பிக்கை இருந்தது. ஆனா, இவ்வளவு பெரிய ஹிட், நான் எதிர்பார்க்காதது. இந்த வெற்றியை, ரஜினி சாருக்கு சமர்ப்பிக்கிறேன். இதைவிட என்ன சொல்லன்னு தோணலை. சினிமாவுல அவர் துரோணாச் சாரியார்னா, நான் ஏகலைவனா இருந்து அவரை பார்த்து வளர்ந்தவன். அவர் வழிகாட்டி இல்லாம வளர்ந்த வழிகாட்டி. எனக்கும் சினிமாவுல வழிகாட்டிகள் யாருமில்ல. என் பயணமும் கிட்டத்தட்ட அவரைப் போலதான். அதனாலதான் சொல்றேன். இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்னு. படத்தோட வெற்றிக்கு உழைச்ச அனைவருக்கும் நன்றி.
சினிமாங்கறதே கிளாமர்தான். ஆனா, அதை உடைக்கிற மாதிரி, மற்ற ஹீரோக்கள் செய்ய துணியாத கேரக்டரை பண்ணியிருக்கீங்களே..?
ஒரு நிமிஷம். தயவு செய்து மற்றவங்களை கம்பேர் பண்ணி கேட்காதீங்க. யாரையும் மட்டம் தட்டறதுக்காகவோ, அவங்களோட திறமையை குறைச்சு மதிப்பிடறதுக்காகவோ நான் அப்படி நடிக்கலை. நான் விரும்பினேன். 'எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது'ன்னு நான் நினைச்சேன். வெங்கட்பிரபுகிட்ட இப்படியொரு கதை கேட்டதும், அவர் சொன்னார். பிடிச்சிருந்தது. பண்ணினோம். ரசிகர்கள் ஏத்துக்கிட்டாங்க. அவ்வளவுதான். இதனால, நான் ஏதோ சாதிச்சிட்டதாகவும் நினைக்கலை. என் பாலிசி, வாழு, வாழ விடுங்கறதுதான்.
கடந்த சில வருடங்களா, போலீஸ், டான் கேரக்டர்கள்லயே நடிக்கிறீங்களே..?
உண்மைதான். எனக்கு 40 வயசாயிடுச்சு. என் வயசுக்கான கேரக்டரை பண்ணலாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இன்னைக்கு ஆடியன்ஸோட ரசனை மாறியிருக்கு. சினிமா பற்றிய எக்ஸ்போஷர் அதிகமாயிருக்கு. ஹாலிவுட்ல இருந்து மூன்றாம் உலக நாடுகளின் படங்கள் வரை நிறைய பார்க்கிறாங்க. அதுபற்றிய விவாதங்கள் நடக்குது. இந்த காலகட்டத்துல, அதுக்கு தகுந்தாப்ல நானும் மாறணும்னு நினைக்கிறேன்.
ரொமான்டிக் படங்களும் வயசுக்கேத்த மாதிரி பண்ண முடியுமே..?
அப்படியான படங்கள் வந்தா கண்டிப்பா பண்ணுவேன்.
வருஷத்துக்கு ரெண்டு, மூணு படம் பண்ற ஹீரோக்கள் மத்தியில, வருஷத்துக்கு ஒரு படம் பாலிசி... ஏன்?
எட்டு மாசத்துக்கு ஒரு ரிலீஸ் இருக்கிற மாதிரி பண்ணலாம்னு நினைக்கிறேன். அதிகபடங்கள் பண்ணனுங்கற ஆசையெல்லாம் எனக்கில்லை. எத்தனை படங்கள் நடிக்கிறோம்ங்கறதும் முக்கியமில்லை. ஹீரோக்களுக்கும் கோல் கீப்பருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. எத்தனை கோல் பிடிச்சாலும், ஏதாவது ஒரு கோலை பிடிக்காம விட்டிருந்தா, அதை பத்திதான் சொல்லிட்டிருப்பாங்க. அதனால நல்ல கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கப் போறேன்.
கிட்டத்தட்ட இளம் ஹீரோக்கள் எல்லாருமே உங்க ரசிகர்களா இருக்காங்களே... எப்படி?
அவங்க எல்லாருக்கும் நன்றின்னு சொன்னா, அது வெறும் வார்த்தையாதான் தெரியும். அதுக்கும் மேல என்ன சொல்றதுன்னு தெரியலை.
கண்டிப்பா நீங்க அரசியலுக்கு வருவீங்கன்னு உங்க நண்பர்கள் சொல்றாங்களே..?
எல்லாரும் அவங்கவங்க வேலையை சரியா பார்த்தா போதும்னு நினைக்கிறேன். நான் நடிக்கிறேன். சம்பாதிக்கிறேன். வரி கட்டுறேன். ஓட்டுப் போடுறேன். முடிஞ்ச சில உதவிகளைப் பண்றேன். குறிப்பா சட்டம்-ஒழுங்கை மதிக்கிறேன். என் குடும்பத்தை கவனிச்சுக்கிறேன். ரசிகர்கள்ட்டயும் அதையேதான் எதிர்பார்க்கிறேன். பாலிடிக்சை அரசாங்கத்துக்கிட்ட விட்ருங்க. அவங்கப் பார்த்துப்பாங்க.
எல்லாருமே அரசியலுக்கு வந்தா, நாடு தாங்காது. லஞ்சம், ஊழல்னு பேசுறோம். இந்தியாவுல இருக்கிற 120 கோடி பேருக்கும், இதுல பங்கு இருக்குன்னு சொல்வேன் நான். நாம ஒழுங்கா இருக்கோமா? நம்ம வீட்டுலயும் குப்பை இருக்கு. முதல்ல அதை கிளீன் பண்ணுவோம். இன்னைக்கு எத்தனை பேர் ஒழுங்கா டிராபிக் சிக்னலை பாலோ பண்றாங்க, சொல்லுங்க? அது ஊழல் இல்லையா? ஒரு குடிமகனா நம்ம கடமையை செஞ்சா போதும். அதுவும் அரசியல்தான்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.