சற்றும் சிந்திக்காத அவசரம் மனிதனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்
ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து பல உயிர்கள் நிம்மதியுடன் வாழும். அது வாழ்க்கையாக இருந்தாலும் சரி, பயணமாக இருந்தாலும் சரி. இந்த கருத்தை இரு பேருந்துகளின் விபத்து மூலம் நம் முகத்தில் அறைய வைக்கிறார் அறிமுக இயக்குநர் சரவணன். இதனூடே மெல்லினக் காதலையும், வல்லினக் காதலையும், இடையினக் காட்சிகளையும் நேர்த்தியாய் கொடுத்து தமிழ் போல் அழகாக்கியிருக்கிறார். சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது, திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. இந்த இரண்டும் விழுப்புரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு பயணிக்கும் ஜெய், அஞ்சலி, சர்வானந்த். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் அனன்யா. இவர்கள் யார்? இவர்களுக்குள் என்ன தொடர்பு? இந்த விபத்தால் இவர்கள் வாழ்க்கையில் நிகழ்த்தும் தலைகீழ் மாற்றங்கள் என்ன? என்பதுதான் 'எங்கேயும் எப்போதும்' படத்தின் திரைக்கதை.
விபத்து நிகழ்வதில் இருந்தே தொடங்குகிறது படம். விபத்தான பேருந்துகளில் பயணித்த கதாபாத்திரங்களின் கடந்த கால வாழ்கையை பின்நோக்கிச் சென்று விவரிக்கிறார் இயக்குநர். அந்த பயணத்தில் திக் திக் என்று நெஞ்சைப் பிடித்தபடி நாமும் பயணமாகிறோம். அந்த விபத்தில் நாமும் சிக்கிக் கொண்டது போல உணர வைத்து விடுகிறார் இயக்குநர். படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் இனி வேகமாக வாகனம் ஓட்டக் கூடாது என உணரவைத்து விடுகிறது படம்.
இப்படி ஒரு நல்ல காதல் ஜோடிகளைப் பார்த்து நாட்கள் பலவாகிவிட்டது. கதிரேசன் (ஜெய்) மணிமேகலை (அஞ்சலி) என்ற பெயர் தமிழ் சினிமாவில் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து இருக்கும். தியேட்டரில் இருப்பவர்களை இதழோரம் புன்னகை வழிய ரசித்து ரசித்து பார்க்க வைத்த அருமையான காதல்.
நெகட்டிவ் கேரக்டர்களே படத்தில் இல்லை என்பது தமிழ் சினிமாவில் புதுசு மற்றும் ஆறுதல்.
ஜெய் தனக்கு கொடுத்த பாத்திரத்தை மிக கச்சிதமாக செய்து இருக்கின்றார்.. அந்த இன்னோசென்ட் அவருக்கு நன்றாகவே வருகின்றது.. வெல்டன் ஜெய் சான்சே இல்லை..
அஞ்சலிக்கு இந்த படம் ஒரு மைல்கல். 'கற்றது தமிழுக்கு' பிறகு 'அங்காடித் தெரு'. இப்போது 'எங்கேயும் எப்போதும்' என்று காலரை ச்சே சாரி.. ஜீன்சை இழுத்து விட்டு சொல்லிக்கொள்ளலாம். யப்பா என்ன நடிப்பு? என்ன நடிப்பு?? கடைசிவரை என்னோடு குப்பை கொட்டுவாயா? என்று கேட்டு விட்டு அப்படின்னா ஐ லவ்யூ என்று அலட்சியமாக சொல்லும் இடத்தில் அஞ்சலி சான்சே இல்லை.. அதே போல ஜெய்யை தானே கட்டிபிடிக்கும் இடத்தில் ஒரு சின்ன கியூட்நெஸ் அதில் இருப்பதை மறுக்க முடியாது.
ஆண் அடங்கி பெண் பொங்கும் கேரக்டர்.. ஜெய்-அஞ்சலிக்கு நன்றாகவே ஒர்க்அவுட் ஆகின்றது... ஜெய் வீட்டில் அஞ்சலி தன் பிரண்ட்ஸோடு சீட்டு ஆடும் போது, அஞ்சலி ஜெய் கையை எடுத்து தனது தோள் மேல் போட்டுக்கொள்ள, விளையாட்டின் போது அஞ்சலி முன் பின்னாக சாய்ந்து இயல்பாக ஆட, ஜெய்யின் கை அஞ்சலியின் மார்பகங்களில் படுவதையும், அதனால் ஜெய் கூச்சத்தில் தவிப்பதையும் விஷுவலாக காட்டாமல் ஜெய்யின் முக ரியாக்ஷனில் காட்டி இருப்பது செம க்யூட்.
அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும், ஓவர் முன் ஜாக்கிரதையும் சர்வானந்த்துக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம.. (கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்..)மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது. மொத்தத்தில் சர்வானந்த், அனன்யா இருவரும் கதாபாத்திரத்தின் இயல்பு மாறாமல் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமில்லாமல், பஸ்ஸில் வரும் ஒரு கல்லூரி மாணவன், மாணவிக்கிடையே ஏற்படும் ஈர்ப்பு, பயணம் முடிவதற்கு காதலாய் மாறி நம்பர் மாற்றிக் கொள்ளும் காட்சி, புது மனைவியை பிரிய முடியாமல் பஸ் ஏற்ற வரும் கணவன், குட்டிப் பெண், சமையல்கார பயணி, ஜெய்யின் ஊர்க்கார பெரியவர். வெளிநாட்டில் ஐந்து வருடமாய் இருந்துவிட்டு முதல் முறையாய் தனக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக ஊர் திரும்பும் ஒரு பாசக்கார அப்பா, அவரது ரிங்டோன். அனன்யாவின் அக்கா, நடுவில் ஏறும் முஸ்லிம் பெண்மணி என்று மேலும் பல குட்டிக் சிறுகதைகளை மிக இயல்பாக கேரக்டர்களாய் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் டயலாக்குகள் அற்புதம் முக்கியமாக அனன்யா தன் அக்காவிடம் ஒரு நிமிடம் பெண் பார்க்க வந்து காபி கொடுத்து விட்டு பிடித்து இருக்கின்றது என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றாய்..ஆனால் நான் ஒரு நாள் அவனோடு பயணித்து இருக்கின்றேன் என்று சொல்வதும்... அஞ்சலி கோபம் வந்தால் உடனே கோபப்பட்டு விடு அதை விட்டு விட்டு ஏதாவது ஒரு நாளில் உனக்கா நான் எவ்வளவு விட்டு கொடுத்து இருக்கின்றேன் என்று சொல்லாதே என்று சொல்லும் உரையாடல்கள் வாழ்வியல் நிதர்சனங்கள்.
படத்தில் இருக்கும் பெரிய லாஜிக் மிஸ்டேக் சென்னைக்கு நேர்முகதேர்வுக்கு வரும் அனன்யாவிடம் ஏன் செல்போன் இல்லை..???
படத்தின் டாப் மோஸ்ட் ஹீரோ கேமராமேன் வேல்ராஜ்தான் என்றால் அது மிகை இல்லை என்று சொல்லலாம்.. சென்னை மற்றும் திருச்சியின் லைவ்லிநைஸ் திரையில் அப்படியே கொண்டு வந்து இருக்கின்றார்கள்..சின்ன சின்ன கியூட் ஷாட்டுகள் படத்தில் அதிகம்... மிக முக்கியமாக பேருந்துகள் கிளம்பும் முன் அவைகள் எவ்விதமாக ஒரு நீண்ட நெடிய பயணத்துக்கு தயராகின்றன என்று சின்ன சின்ன ஷாட்டுகளில் விளக்கும் காட்சிகள் கவிதை.. அதே போல ஒரு விபத்து ஏற்பட்டதும், அது யார் யாருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் யார் யார் அதை ரொம்ப சர்வசாதாரணமாக அணுகுவார்கள் என்று காட்சிப்படுத்திய இடங்களும் அருமை.
சத்யா இசையில் 'கோவிந்தா...' பாடல் அருமை. எடிட்டிங்.. ஆன்டனி..வெல்டன் முக்கியமாக 'கோவிந்தா' சாங் கட்டிங் மற்றும் சாலைகாட்சிகள் மற்றும் விபத்து காட்சிகயில் தனது கத்திரியால் ஷார்ப் பண்ணி இருக்கின்றார்.
ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன், குருவிற்கு ஏற்ற சிஷ்யன் என்பதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். பிளாஷ்பேக்கிற்குள் பிளாஷ்பேக் என்றாலும் அதை தனது திறமையான திரைக்கதையால் நேர்த்தியாக கதை சொல்லி இருக்கிறார். இத்தனை சம்பவங்களையும் தன் அழகான வசனத்தால் கோர்த்து மாலையாக்கி தந்திருக்கிறார். இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பளார் ஏ.ஆர்.முருகதாஸிற்கு எங்கேயும் எப்போதும் நன்றி சொல்லலாம்.
எங்கேயும் எப்போதும் - கவிதை!
நடிகர்கள்
ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த்
இசை
சத்யா
இயக்கம்
எம். சரவணன்
தயாரிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ்
ஜெய், அஞ்சலி, அனன்யா, சர்வானந்த்
இசை
சத்யா
இயக்கம்
எம். சரவணன்
தயாரிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ்
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.